, , , போலி ஹோமியோபதி மருத்துவர்கள் மீது நடவடிக்கை: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணை | HOMEOTODAY

0
தமிழகம் முழுவதும் போலி ஹோமியோபதி மருத்துவர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
எழும்பூர் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் துணை ஆணையருக்கு இத்தகைய உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
போலியோ ஹோமியோபதி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைத் தலைவர் (டி.ஜி.பி.), சென்னை மாநகர போலீஸ் ஆணையர், மத்திய குற்றப் பிரிவு போலீஸ் துணை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தாக்கல் செய்த மனு விவரம்:
நான் 2004-09-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் தலைவராக இருந்தேன். ஹோமியோபதி மருத்துவ சட்டப் பிரிவின் அடிப்படையில் 3 இனங்களாக ஹோமியோபதி மருத்துவர்களை பதிவு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது.
அதாவது, பட்டம் பெற்று மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கிளாஸ்-ஏ என்றும், 10 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் கிளாஸ்-பி என்றும் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கிளாஸ்-சி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கிளாஸ்-பி மற்றும் கிளாஸ்-சி வகை பதிவுகள் 1976-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, கிளாஸ்-ஏ வகையை மட்டும் பதிவு செய்யும் நடைமுறை தொடர்கிறது. மேலும் 1978-ஆம் ஆண்டு மருத்துவர்கள் பதிவு ஆவணம் ("மெடிக்கல் ரிஜிஸ்டர்') வெளியிடப்பட்டு, கிளாஸ்-ஏ வகை ஹோமியோபதி மருத்துவர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் பதிவாளர் அவ்வப்போது இந்த மருத்துவப் பதிவு ஆவணத்தை உரிய முறையில் புதுப்பித்து வெளியிட வேண்டும். அதாவது, கல்வித் தகுதியுடன் ஹோமியோபதி மருத்துவர்களின் பெயர், இறந்த ஹோமியோபதி மருத்துவர்களின் பெயரை நீக்குதல் ஆகியவற்றைச் செய்து மருத்துவர்கள் பதிவு ஆவணத்தை வெளியிட வேண்டும்.
போலி சான்றிதழ்: ஆனால், ஹோமியோபதி மருத்துவர்கள் பதிவு ஆவணத்தில் உள்ள இறந்த டாக்டர்களின் பதிவெண்களைப் பயன்படுத்தி, மருத்துவ கவுன்சிலில் சட்ட விரோதமாக சான்றிதழ் பெற்று மருத்துவத் தொழிலில் போலி மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இத்தகைய போலி ஹோமியோபதி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ்நாடு காவல் துறைத் தலைவரிடம் (டி.ஜி.பி.) புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையையும் போலீஸார் எடுக்காததால், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே போலி ஹோமியோபதி மருத்துவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா அண்மையில் அளித்த தீர்ப்பு விவரம்:
போலியாக செயல்படும் ஹோமியோபதி மருத்துவர்கள் குறித்து தன்னிடம் உள்ள விவரங்களை மனுதாரர் (டாக்டர் ஆர். ஞானசம்பந்தம்), மத்திய குற்றப் பிரிவு போலீஸ் துணை ஆணையருக்கு விரைவில் வழங்க வேண்டும். தொடர்ந்து போலி ஹோமியோபதி மருத்துவர்களை போலீஸ் துணை ஆணையர் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

source: dinamani.com

Post a Comment

 
Top